Breaking

Wednesday, 16 October 2019

பெரும்பிடுகு முத்தரையர் வரலாறு -Mutharaiyar History

பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் வரலாறு


நாடாண்ட முத்தரையர் மன்னர்கள்:
_____________________________________

4.பெரும்பிடுகு முத்தரையர்

முத்தரையர் மன்னர்களுள் சீரோடும், சிறப்போடும் ஆண்ட மன்னன் இரண்டாம்  பெரும்பிடுகு என்ற சுவரன் மாறன் மன்னன் ஆவான். இவனது காலம் கி.பி.660 முதல் 690 வரை என்று வரலாற்றறிஞர்கள் தெளிவுபடுத்தியுள்ளனர். வல்லத்தையும் தஞ்சையையும் தலைநகராக கொண்டு ஆண்டான்.

இவனது விருதுப் பெயர்கள் புதுக்கோட்டை மாவட்டம், கிள்ளுக்கோட்டையில் நடு கல்லாக நடப்பட்டுள்ளதில்..👇

1)ஸ்ரீ சத்ரு கேஸரி
2)அபிமான தீரன்
3)வாள்வரி வேங்கை குத்தியது என்றும்.

தஞ்சாவூர் மாவட்டம் செந்தலையில் கட்டப்பட்டுள்ள சுந்தரேஸ்வரர் கோவில் தூணில் ஒரு பக்கத்தில்👇👇

1)ஸ்ரீ சத்ரு மல்லன்
2)ஸ்ரீ கள்வர் கள்வன்
3)ஸ்ரீ அதி சாகசன் என்றும்

அதே தூணில் மறு பக்கத்தில்👇👇👇

1)ஸ்ரீ மாறன்
2)அபிமான தீரன்
3)சத்ரு கேசரி
4)தமராலயன்
5)செருமாறன்
6)வேல் மாறன்
7)சாத்தான் மாறன்
8)தஞ்சைக்கோன்
9)வல்லக்கோன்
10)வான் மாறன் என்றெல்லாம் 
புகழ்ந்து பொறிக்கப்பட்டுள்ளது.

காலத்தால் முந்திய இவனது ஆட்சிக் காலத்தில், தமிழகத்தில் இவ்வளவு வெற்றிச் சிறப்புப் பெயர்களை கொண்ட எந்த ஒரு மன்னரும் இருந்ததில்லை.

இவன் பொரிட்டு வென்ற இடங்களையும் கல்வெட்டாகவே வெட்டச் செய்துள்ளான்.
அவையாவன..👇👇

1)கொடும்பாளூர்
2)மணலூர்
3)திங்களூர்
4)காந்தலூர்
5)அழுந்தியூர்
6)காரை
7)மரங்கூர்
8)புகழி
9)அண்ணல்வாயில்
10)செம்பொன்மாரி
11)வெண்கோடல்
12)கண்ணனூர்

இம் மன்னன் தனது அவையை தமிழ்ப் புலவர்களைக் கொண்டு அலங்கரித்துள்ளான். சிறந்த தமிழ் புலவர்களை ஆதரித்து, வளர்த்து தனது ஆட்சியின் புகழையும், தமிழை வளர்த்து ஆதரித்த முறைகளையும் கல்லிலே வெண்பாக்களாக வெட்டச் செய்துள்ளான்.

அந்த வகையில் கன்னித்தமிழை வளர்த்தவர்களில் முதன்மையான இடம் பெறுபவர் பெரும்பிடுகு முத்தரையரே ஆவார். இரண்டாம் பெரும்பிடுகு என்ற சுவரன் மாறனின் அவையை அலங்கரித்த, அளப்பரிய புகழ் பெற்ற.👇

1)பாச்சில்வேள் நம்பன்
2)ஆச்சாரியார் அநிருத்தர்
3)கோட்டாற்று இளம் பெருமனார்
4)அமருணிலை ஆயின குவாவன் காஞ்சன். ஆகியோர் அலங்கரித்துள்ளனர்.

இரண்டாம் பெரும்பிடுகு முத்தரையரின் வெற்றிச் செய்திகளை, அக்கால தமிழ் புலவர்களே போற்றிப் பாடியதை, தஞ்சை மாவட்டம் செந்தலை கோயில் தூணில் பொறித்துள்ளனர். தற்சமயம் கல்வெட்டுக்கள் காலத்தினால் சிதைவுற்றுள்ளன. ஒவை அனைத்தும் நமக்கு கிடைத்திருந்தால், முத்தரையர் ஆட்சியின் மகிமையை உலகு நன்கறிய வாய்ப்பாக இருந்திருக்கும். பாடல்கள் அனைத்தும் கன்னித் தமிழில் வெண்பாக்களாகப் பாடி கல்வெட்டுக்களில் பொறித்துள்ளனர்.

வெண்பா - 1

வெங்கட் பொரு கயல்சேர் வேல் கொடியோன் வான் மாறன் - செங்கட் கரும்பகடு சென்றுழக்க - வான் குலத்தோர் - தேரெழுந்து மாவழுந்தச் செங்குருதி மண் பரந்த - ஊரழுந்தி யூ ரென்று மூர்.

இக் கல்வெட்டு அழிந்தியூரில் நடைபெற்ற போரை விளக்குகிறது. வேல் கொடி உடையவன் என்பதையும், எதிர்த்து மரணமடைந்தவர்களின் ரத்தத்தால் பூமியே சிவந்து கிடந்தது எனக் கூறுகிறது. இப்படி சிவந்து கிடந்த மண்ணை, இம்மன்னன், யானை கட்டி உழுதான் என்று சிறப்பித்துக் கூறுகிறது.

வெண்பா - 2

ஒழுகு குருதி யுடனொப்ப வோடிக்
கழுகு கொழங் குடர் கவ்வ - விழி கட்பேய்
புண்ண நைந்து கையும்பப் போர் மணலூர் வென்றதே
மண்ணனைந்து சீர் மாறன் வாள்.

மணலூரில் நடைபெற்ற போரைப் பற்றியும் போர்க்களத்தில் இரத்தமும், சதையும், பிண்டங்களுமாக நிறைந்து. கழுகுகளும் திரண்டு வந்ததை பற்றி குறிப்பிட்டுள்ளது.

வெண்பா - 3

வஞ்சிப் பூச் சூடிய வாள மருள் வாகை பூ க் - குஞ்சிக் கமழ் கண்ணிக் கோமாறன், தஞ்சைக் கோன்
கோளாளி மொய்ம்பிற் கொடும்பாளூர் காய்ந் தெறிந்தான்
தோளால் உலகளிக்குந் தோள்

மாறன், தஞ்சைக்கோன் என்ற விருத்துப் பெயர் பற்றியும், வச்சிப் பூ, வாகைப் பூ உடையவன் என்பது பற்றியும், கொடும்பாளூரில் நடைபெற்ற போரின் வெற்றி பற்றியும் சிறப்பாக கூறுகிறது.

வெண்பா - 4

எறி விசும்பு, மிரு நிலமாய்த் தென் பவான் - மாறன், செருவேல் மறங்கனன்று - சீறக்
கொடி மாடத் தண் கொடும்பை கூடாத மன்னர் - நெடுமா மதிலிடிந்த நீறு.

இப்பாடலும். கொடும்பாளூர் போர் பற்றியே உள்ளது. இவனது கோவத்தால் கொடும்பாளூர் கோட்டை உடைந்து நொறுங்கி சிதறியதையும், இதுசயமம் ஏற்பட்ட புழுதி புயல், ஆகாயத்தை மறைத்து, ஆகாயத்தையும் புழுதிப் பூமியாக காட்சியளித்தது என்று கூறுகிறது.

வெண்பா - 5

அல்லிற் பிரிந்தார்க்கே யல்லையாய்க் காலந் தான் - முல்லைக்கே முற்படுமோ யென்றென்று - வல்லக் கோன் காரைவாய்ப் போர் வென்ற வேல்மாறன் கை போலும் - காரைவாய்க கேனேனே கண்டு.

காரை என்ற ஊரில் நடைபெற்ற போர் இவனது வெற்றியை கூறுகிறது. வல்லக்கோன் என்ற விருதுப் பெயரும் காணப்படுகிறது. இவனது கை வேலை, கார்மேகம் மழை பொழிவுக்கு உவமையாகவும். தலைவனை பிரிந்த தலைவியின் நிலையினை முல்லைப் பூத்துக் குழுங்கும் கார்மேகம் காலம் என்றும் விவரிக்கின்றது.

வெண்பா - 6

செருவவரா னத னாற் சிந்தியார் போலும்
மருவலராய் வான்மாறன் சீறக் கருவிளை - கண்டோற்ற வண்டரவங் கார் தொற்றுங் காந்தளூர் - மண்டோற்ற வேந்தர் மனம்

காந்தளூர்ப் போரின் வெற்றியை விளக்குகிறது. வான்மாறன் என்ற விருதுப் பெயரினையும், நமக்கு அளிக்கிறது. இம்மன்னனின் படை வலிமையை அறியாது வந்த எதிரிகளின் படை சிதறடிக்கப்பட்டதை இப்பாடல் நமக்கு தெளிவாக்குகிறது.

வெண்பா - 7

எண் கி னிருங் கினையு மேறற் கரியவே
வண்கை செருமாறன் வாழ் காய்த்தி - விண்படர் வான் - சேய் நாடு தாமூர்ந்த மாநாட கண்ணனூர்க் -கோ நாடர் புக் கொளிந்த குன்று

இக்கல்வெட்டு கண்ணனூர்ப் போரின் வெற்றியை குறிப்பிடுகிறது. செருமாறன் என்ற விருதுப் பெயரைத் தருகிறது. எதிரிகள் ஓடி ஒளிந்த மலையும், இம்மன்னனது வீரத்தையும், கொடைத் தன்மையையும் விளக்குகிறது.

வெண்பா - 8

மலர்ந்த தார் வான்மாறன் மண்ணணல் வாயில் - கலந்த நாட் காணலாங் காண்க உலந்தவர் தம் - எண் பருத்து சூற் பேயி ருந்து றங்க விழ் குடர் - பண் பருந்து சிந்தப் பகடு

இப்பாடல் அன்னவாசலில் நடைபெற்ற போரை விளக்குகிறது. வான்மாறன் என்ற விருதுப் பெயரையும் குறிக்கிறது. இம் மன்னனை எதிர்த்த பகைவர்கள், இவனது வாளுக்கு இறையாகிய பிணங்களைப் பேய்களும், கழுகுகளும் தின்றன. இவனது கரும் (யானைகள்) பகடுகள் இவ்வூரையே உழுது நாசம் செய்ததைக் காண நலவர் நம்மை எல்லாம் அழைக்கின்ற விதமாகப் பாடியுள்ளார்.

வெண்பா - 9

பாமருவு கின்ற யாழ்ப் பாண் மகனே பண்டெல்லாம் - யாமனிது மெங்கையர்க்கே சொல்லும் நீ மாமங்கை - தென்னாடர் காதலியர் தீ நாட வாய் சிவந்த - மின்னாடு வேள் மாறன் மெய்.

வேல் மாறன் என்ற விருதுப் பெயர் குறிப்பிடப்படும் இவ் வெண்பாவில் மாமங்கை வெற்றியும், பாண்டியன் தோற்றத்தையும் கூறுகிறது. கணவன் இறந்ததை கேள்வியுற்ற பாண்டியனின் மனைவியார், தீப்புகுந்து இறந்ததையும், இவனது வெற்றியை யாழில் இசைத்து மகிழும்படி பாணரிடம், புலவர் கூறுகிறார்.

வெண்பா - 10

நிற்கின்ற தண் பனை தோறுந் தஞ்சைத் திறம்பாடி நின்றார் - விற்கின்ற வீரர்களுர்கின்ற வியினைக் குன்று கண் - நெற்குன்ற யானை ...........................

நெற்போர் போன்ற பயங்கர யானைப்படை பற்றியும், பகைவர்களை வென்ற பிணக் குன்றுகளாக்கியது பற்றியும், யானைகள் பிணக் குன்றுகளை துவைத்து, மிதித்து சென்றதையும் தஞ்சை தரணியின் சிறப்பையும், போற்றிப்பாடும் புலவர்களுக்கு யானைகளையே பரிசாக அளித்ததையும் இவ்வெண்பா விளக்குகிறது.

வெண்பா - 11

பால் கொண்ட செவ்வாய் விளைய மொழிப் பருவத்து முன்னம் வேல் கொண்ட மாறன் ..................................

இளம் பருவத்திலேயே, சேரர்களை அவர்களின் தலைநகரான வஞ்சியில் சென்று வென்றதை விளக்குவதாக உள்ளது இவ்வெண்பா பாடல்.

வெண்பா - 12

சேட்டினார் பூந்தன் பொழிற் செம்பொன் மாறிக் கட்டியரன் - மூட்டின சிற்றமு முன்சென் றதன்பின் பகட்டின தோர்
.................................................மாறன்
................................................................

செம்பொன் மாறி என்ற இடத்தில் நடைபெற்ற போரையும், எதிரிகளின் வலிமை மிக்க அரண்களை அழித்தது பற்றியும், பகடுகள் (யானைகள்) கொண்டு நகரை உழுது அழித்தது பற்றியும், குறிப்பாக இவனது படை வலிமையை இப்பாடல் விளக்குகிறது.

வெண்பா - 13

பனையைப் பகடு கூடாவென்று பல்லவன் வெல்லத் தென்னவன் - முனையைக் கெடச் சென்ற மாறன் முகிலி வளர் பிலியுண்டச் - சுனையாச் சுனைமணிப் பாறையப் பாறை சொல் என் விளைந்த - வினையைப் பறிப்பவன் திக்கி னிலங்கு புகழ்வனே.

பல்லவ மன்னனுக்காக இவன் பாண்டியனை வென்றதையும், போரிட்ட இடம் மணிப்பாறை (மணப்பாறை) என்பதையும், பல்லவர்க்கு பக்கபலமாகவும், பாண்டியர்க்கு சிம்ம சொப்பனமாக விளங்கினார் என்கிறது.

வெண்பா - 14

தாழும் பூசற்றிங்க ளூர்த் தெவ்விர் மனந்தளரத் தென்னவன் - வேளங்கள் பட்டது கண்ட வேந்தன் மன் பூமலரான்
வாழுந் தடவரைத் தோள் நெடுமாறன் .....
......................................

திங்களூரில் நடைபெற்ற போரைப்பற்றி விளக்குகிறது. தென்னவனை (பாண்டியனை) எதிர்த்து வெற்றி பெற்றுள்ளான். பகைவர்கள் பலராக கூடி எதிர்த்ததையும், இவனது யானைப் படைகளால் வெற்றி பெற்றதையும் கூறுகிறது. இவனைப் புலவர், திருமாலுக்கு ஒப்பாக போற்றுகின்றார்.

வெண்பா - 15

போலரசு பிறவா....நெடுமேரு நெற்றியில்
பொன்போல் பசுங் கதிராயிரம் வீசும்
பெற்றோர் பரிதிக் கேன் போதர விடுமோ
இணை சோதி வியு........விசும்பே

இம்மன்னனால் நடத்தப்பட்ட போரின் வெற்றிகளால் ஏற்பட்ட புகழ்களை விவரிக்கிறது. இமயத்தின் மீது நெற்றியில் பொட்டாக கதிரவன் பசுங்கதிர்களை வீசுவதை வர்ணிக்கும் புலவர், கதிரவனைப்போல் இவனது பெருமைக்கு வானமே எல்லையாக இருந்தது என்று வர்ணிக்கிறார்.

வெண்பா - 16

நின்றடு வில்லவன் வல்லரண் செந்தோனெனச் - சென்றிடு கீர்த்தி ....
............................................................................................................................

வில்லவன் என்ற சேர மன்னனை பற்றியும், அவனிடம் வல்லரண் இருந்தது பற்றியும், பல்லவ மண்ணனுக்காக பெரும்பிடுகு முத்தரையன் சேரனை வென்றதையும் குறிப்பிடுகிறது.

வெண்பா - 17

மறப்படை மீனவன் வல்லவன் பல்லவன் சேனைக் கன்று- புறப்பட மாறு பொரு களிற்று .................................................................................................................................

வலிமைமிக்க படையுடைய பாண்டியனை, பெரும்பிடுகு முத்தரையன், பல்லவர் சார்பாக தனது வலிமைமிக்க யானைப்படையால் மட்டுமே பாண்டியர் படையை சிதறடித்தான் என்பதை விளக்குகிறது.

வெண்பா - 18

எங்கை யளவிற்றே பாண! இக் கல்விக்கு
மங்கை செருவேல் மாவல்ல மாறன் கை.
.............................................................................................................................................

முத்தரையரின் வீரத்தையும், வாள் வலிமையையும், தலைவி ஒருத்தி புகழ்ந்து பாணனிடன் கூறுவதாக இப்பாடல் உள்ளது.

வெண்பா - 19

எருவை புறஞ் செலாத் தோய்ந்தன வா லெங்கும் - வருபுனல் சூழ் வல்லக் கோ மாறன் செருவில் - மறங்கூர் வாய்ப் பட்டா ருடல் குலைந்து மாந்திப் - புறங்கூர் வாய்க் கொண் டெழுந்த புன்.

மறங்கூர் என்ற இடத்தில் நடந்த போரின் வெற்றியை குறிப்பிடுகிறது. வல்லக் கோ மாறன் என்ற விருதுப் பெயரும் காணப்படுகிறது. போர்க்கள காட்சியில் உடல்கள் சிதறிக்கிடந்ததையும், பிணத்தை குடைந்து வயிறார உண்ட கழுகுகள், சதைப் பிண்டங்களை வாயில் கவ்விக் கொண்டு இரத்தம் வழிய வழிய பறந்தனவாம் என்று வர்ணிக்கிறது.

வெண்பா - 20

பேரிலைப் பங்கயங் கூம்பப் பிறையின் குறு முளைபோந் - தீரிலை கொள்ளும் பதத்தில்; இணையராண முட்டக்
கூர்நிலை ...................................................................................................................................

இம்மன்னனது இளமைப் பருவ வீரத்தை விளக்குகிறது. இவனது வேலின் கூர்மை தாமரை மொட்டிற்கு ஒப்பிடப்பட்டுள்ளது.

வெண்பா - 21

சொற்புகு தொண்டைக் கனிபுகு தூமதி பொன் முகத்தாள் - பொற்புக வெற்புப் புகுதி கண்டாய்ப் புகழிப் பொருதார்
கற்புக விற்புகக் கண்டவன் கள்வர்கள்வன் றஞ்சை - நற்புகழான்கரம்  பொற்கொடை காலுங் கருமுகிலே.

இக் கல்வெட்டில் இம் மன்னன் கள்வர்கள்வன், தஞ்சை நற்புகழாளன், என்றெல்லாம் போற்றப்படுகிறான். புகழி என்ற இடத்தில் நடந்த போரில் வெற்றி பெற்றதையும், இவனது படை வலிமை வாள்வீச்சை எதிர்த்து நிற்க முடியாத எதிரி படைகள் மலைப்பகுதியில் ஓடி ஒளிந்துகொண்டதையும் விளக்குகிறது. இதே சமயத்தில் இவனது கொடைத் தன்மையைக் கார்மேகத்துக்கு உவமையாக கூறுகிறது.

வெண்பா - 22

நாகங்கண் டஞ்சவென் நெஞ்சஞ்கல் லென்னவொல் லெடக்கடனீர்
மாகங் கொண் டேறிவரச் சுவறன்மா றன்னாமெங் கோன்வென்று
மாகங் கொண்டானென..........................
................................................................

இவனது நெஞ்சுறுதியையும், புகழையும் விளக்குவதாக அமைந்த பாடல்.

வெண்பா - 23

………………………………………………………………………
மண்டீது கண்டான் தஞ்சைச் செம்புல நாட்டு வெண்கோடல் - விண்டபோது கொண்டாயர் மலையப் புதுமணல் மீது செந்தீத் - தண்டு கண்டாலன்ன கோவங்களூர்கின்ற தாழ்புறவே.

வெண்கோடல் என்ற ஊர் பற்றியும், இம்மன்னனது நாட்டின் சிறப்பு இயல்புகளை பற்றியும் கூறுகிறது.

வெண்பா - 24

தனமுடி லாயமும் பூவையுந்தன் கைக்கிளையும் முனவிட்டு - எனமுத லன்பு மென்னாகச் செய் தானியக்கத்தை  விண்டார் - வனமுதல் சாரக் கருங்கைப் பகடுய்த்த மாறன் தெவ்விர் 
காண முதல் .............................................

இவ் வெண்பா பெரும்பிடுகு மன்னரின் யானைப்படையின் சிறப்பை விவரிக்கிறது. இப்படையைக் கண்டதும் பகை மன்னர்கள் சுற்றம், உறவு அனைத்தயும் மறந்து விட்டு காட்டுக்குள் ஓடி ஒளிந்தனர் என்பதாக கூறுகிறது.

இரண்டாம் பெரும்பிடுகு என்ற சுவரன் மாறனின் பல கல்வெட்டுக்கள் காணாமல் போயுள்ளன. இவை எல்லாம் நமக்கு கிடைத்திருந்தால் முத்தரையர் ஆட்சியின் பெருமைகள், சிறப்பாக வெளிப்பட்டிருக்கும்.

நியமம் மாகாளத்து பிடாரியார் திருக்கோவில் இம்மன்னனின் கலைப்பணிகளில் மிக முக்கியமானதாக கருதப்படுகிறது. நேமம் கிராமத்தில் அவர் பிடாரிக்கு எழுப்பிய திருக்கோயிலாகும். நியமம் என்று அக்காலத்தில் அழைக்கப்பட்ட ஊர் தற்போது நேமம் என்று வழக்கில் உள்ளது.

வெற்றிக் கடவுளான கொற்றவையே பிடாரி எனவும் அழைக்கப்படுகிறாள். பேரரசர் சுவரன் மாறன் களம் பல கண்ட வேங்கையாக விளங்கியவர். 

தன்னுடைய போர் வெற்றிகளுக்கு எல்லாம் கொற்றவையின் அருளே 
உற்ற துணை யெனக் கருதினார்.

அதன் காரணமாகவே தனது ஆட்சிக்கு உட்பட்ட காவிரி கரையோரம் வளமிக்க ஊரான நேமத்தில் பிடாரிக்கு திருக்கோவில் எழுப்பினார். செந்தலை கல்வெட்டும் இதனையே.👇👇

"பெரும்பிடுகு முத்தரையனாயின சுவரன் மாறனவ னெடுப்பித்த பிடாரிகோயில்" என்று கூறுகிறது.

கல்வெட்டு..👇

1.(குண) முதித பெரும்பிடுகு முத்தரை
2.யானாயின குவாவன் மாறனவ
3.ன் மகன் இளங்கோவதி யரைய
4.னாயின மாறன் பரமேஸ்வரன
5.வன் மகன் பெரும்பிடுகு முத்த
6.ரைய னாயின சுவரன் மாறனவ
7.னெடுப்பித்த பிடாரி கோயில் அவன்
8.எறிந்த ஊர்களும் அவன் பேர்க
9.ளும் அவனைப் பாடினோர் பேர்களும் இ
10.த்தூண் கண் மெலெழுதினவை" என்று கூறுகிறது.

"சக்ரவர்த்தியாக திகழ்ந்த சுவரன் மாறன், முதலாம் நரசிம்மவர்மப் பல்லவனுக்கும், முதலாம் இராஜ இராஜ சோழனுக்கும், மாறவர்மன் சுந்தரபாண்டிய்னுக்கும் ஒப்பானவன்"

என்று வரலாற்று வல்லுனர்கள் வர்ணிக்கும் இவனது வெற்றிகளை கண்ணித் தமிழில் வெண்பாக்களாக வெட்டச் செய்ததிலும் மூத்த அரையனான இம் முத்தரையன் வீரத்திலும், தீரத்திலும், விவேகத்திலும், கண்ணித் தமிழை வளர்த்த தொண்டிலும்  அனைவரையும் விஞ்சி வழிகாட்டியாக திகழ்கிறார்.

பேஸ்புக் பதிவு: சிவமாரி.....

MUTHURAJA NETWORK -முத்துராஜா நெட்வொர்க்

2 comments:

  1. களப்பிரர் முத்தரையரின் மூதாதையர்
    கி.பி. 650 முதல் கி.பி. 860 வரை முத்தரையர் என்போர் சோழ நாட்டில் தஞ்சைக்கும் திருச்சிராப்பள்ளிக்கும் இடைப்பட்ட பகுதியைச் செந்தலை என்னும் ஊரைத் தலைநகராகக் கொண்டு ஆண்டு வந்தனர். செந்தலை என்னும் ஊர் தற்போது, தஞ்சை மாவட்டத்தில் திருக்காட்டுப்பள்ளி என்னும் ஊருக்கு அருகில் ஒரு சிற்றூராக உள்ளது. இம்முத்தரையர் மேலே குறிப்பிட்ட களவர் இனத்தவராகிய களப்பிரர் குலத்தின் வழி வந்தவர்கள் எனக் கருதப்படுகின்றனர்.
    கி.பி.250 அளவில் வேங்கடத்திலிருந்து வந்த களப்பிரர் சிறிது சிறிதாகச் சேர, சோழ, பாண்டிய நாடுகளைக் கைப்பற்றி ஆளத் தொடங்கினர். சேர நாடு, சோழ நாடு, பாண்டிய நாடு என்னும் மூன்று தரைப் பகுதிகளையும் கைப்பற்றி ஆண்ட காரணத்தால் களப்பிரர் தங்களை முத்தரையர் என அழைத்துக் கொண்டனர். களப்பிரர் முத்தரையரின் மூதாதையர் என்பதை வைகுந்தப் பெருமாள் கோயில் கல்வெட்டு ஒன்று குறிப்பிடுகிறது.

    ReplyDelete